Sunday, May 20, 2007

இந்திய உளவுத்துறைக்கு (றோ) திரைக்கதை எழுத ஆட்கள் தேவை

இந்திய உளவு நிறுவனத்திற்கும், தமிழ் நாட்டு காவல்துறைக்கும் எதிர்காலத்தில் திறமையான கடத்தல் நாடகத்தை நடத்த ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என சில சூசகமான வட்டாரத்தில் இருந்து தகவல்கள் நமக்கு கசிந்துள்ளன. முன்பெல்லாம் உளவுத்துறை கொடுக்கும் செய்தியை இன்னும் அதிக "பில்டப்" செய்து வெளியிட இந்து, தினமலர் போன்ற பத்திரிக்கைகள் மட்டுமே இருந்தன. ஆனால் இப்பொழுது வயற்காட்டில் வேலை செய்து கொண்டிருந்த "மக்கள்" எல்லாம் மைக்பிடித்து சந்து பொந்துகளில் புகுந்து உண்மையை வெளிக்கொண்டு வந்து விடுகிறார்கள் என்பதால் கடுமையான சவாலினை தற்போதைய திரைக்கதை குழு எதிர்கொண்டுள்ளது.

நடத்தப்பட்ட கடத்தல் நாடகத்தில் பல ஓட்டைகள் இருப்பதை இன்று நள்ளிரவு கூடிய உளவுத்துறை கூட்டம் கண்டறிந்தது. இந்தக் குழு எம்.கே.நாராயணன் தலைமையில் நடந்தது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக "உளவுத்துறை" கண்ட கேப்டன் விஜயகாந்த் கலந்து கொண்டார்.

கேப்டன் விஜயகாந்த் தனது உளவுத்துறை திரைப்பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டு திரைக்கதையில் இருக்கும் பல ஓட்டைகளை சுட்டிக்காட்டினார்.

முதல் ஓட்டை :
"நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் அங்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் இருந்தது. அனைவரும் இலங்கைத் தமிழில் பேசினர். அவர்கள் கொண்டு சென்ற இடங்களிலும் எல்லாம் விடுதலைப் புலிகள் இயக்கப் பாடல்கள் ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்தது. "


இதுவெல்லாம் ஆதி காலத்து டெக்னிக். அதுவும் இவர்கள் <-> அவர்கள் மீதும், அவர்கள் <-> இவர்கள் மீதும் பழி போட்டுகொண்டிருக்கும் பொழுது இவ்வளவு "வெள்ளேந்தியாக" ஒரு "டெரரிஸ்ட் க்ரூப்" தன் போட்டோவையும் போட்டு, பாட்டையும் போட்டு கடத்துவது கோலிவுட்டில் கூட காமெடிப் படங்களில் தான் நடக்கும். "சீரியஸ் படங்களில் கோலிவுட்டில் கூட நாங்கள் வைக்க மாட்டோம்" என்று கேப்டன் விஜயகாந்த் கூற, எம்.கே.நாரயணன் முகர்ஜியை பார்த்து "நற நற" என்று முறைத்தார். முகர்ஜி அவசரமாக பாத்ரூம் பக்கம் ஓடினார்.

இரண்டாவது ஓட்டை
"அவர்கள் வேறு எதற்காகவும் எங்களைக் கடத்தவில்லை. எங்களது படகு அவர்களுக்குத் தேவைப்பட்டது. அதற்காகத்தான் கடத்திச் சென்றனர் என்றார் கிளமென்ட்ஸ்"

கேப்டன் விஜயகாந்த் இடி இடியென்று சிரித்தார்.
"எப்படிங்க இப்படியெல்லாம் காமெடி சீன் வைக்கறீங்க. நாங்க கூட இப்படி காமெடி சீன் வைக்க முடியாம ரொம்ப கஷ்டப்படறோம். ஆனா இதனை இன்னும் கொஞ்சம் டெவலப் பண்ணலாம். அதாவது மீனவர்கள் ரொம்ப ரூசியான மீன் கொழம்பு வைச்சிருந்தாங்க. அதனால தான் கடத்தினோம் அப்படின்னு வைச்சா இன்னும் காமெடியா இருக்கும்" என்று மறுபடியும் சிரித்தார் விஜயகாந்த்

எம்.கே.நாராயணனும் துன்பத்தை மறந்து இன்பமாக சிரித்தார்

மூன்றாவது ஓட்டை
"செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்க முயன்றனர். ஆனால் அப்போது குறுக்கிட்ட கியூ பிரிவு அதிகாரி நாஞ்சில் குமரன், இன்னும் அவர்களிடம் நாங்கள் பல தகவல்களைப் பெற வேண்டியுள்ளது. மீனவர்கள் வீடு திரும்பிய பின்னர் அவர்களை நேரில் பார்த்து உங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளளாம் என்றார்."

"இது தான் நீங்க செஞ்ச பெரிய தப்பு. முதல்ல மீனவர்களுக்கு டியூசன் எடுக்கனும். என்ன கேள்வி கேட்பானுங்க, எப்படி பதில் சொல்லனும்னு டியூசன் எடுத்து, உங்க முன்னாடியே ஒரு ரிகர்சல் நடத்தியிருக்கனும். அவிங்க ஏதாவது எசகு பிசகா உளற ஆரம்பிச்சாலும் அதை சரி செய்திருக்கலாம். அத விட்டுபுட்டு வீட்டுக்கு போய் கேள்வி கேளுங்க அப்படின்னு சொல்லிபுட்டீங்க. அதுவும் வயகாட்டுல இருக்குற எசகு பிசகான ஆளுங்க மைக்க பிடிச்சுக்கிட்டு எவனை பிடிக்கலாம் அப்படின்னு இருக்கறப்ப இப்படி மாட்டிக்கிட்டீகளே மக்கா"

என்றார் கேப்டன் விஜயகாந்த்.

மிகப் பெரிய ஓட்டை

ஓட்டையிலேயே மிகப் பெரிய ஓட்டை எதுன்னா...

"யாருப்பா...இந்த திரைக்கதையை டைரக்ட் செஞ்சது. ஒரு 13 வயசு பையன எல்லாம் இந்த ஆட்டத்துல ஏம்பா சேர்த்துக்கிறீங்க. பாவி பய புள்ள, அப்படியே உண்மையை புட்டு புட்டு வைச்சிடானய்யா, ஆப்பு வைச்சிடானய்யா, ஆப்பு...."

இப்படி ஒரு ஓட்டையான திரைக்கதையை அமைத்ததால் கடும் கோபத்தில் இருக்கும் றோ, எதிர்காலத்தில் அரங்கேற்றப்படும் கடத்தல் நாடகத்திற்கு திரைக்கதை எழுத புதிய உதவி டைரக்டர்களை தேர்வு செய்வது பற்றி யோசித்து வருகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சோ, இந்து ராம் போன்றவர்களின் சிபாரிசு கடிதத்துடன் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என வேலைவாய்ப்பு வலையிதழ் மூலம் செந்தழலார் அறிவிக்க உள்ளார்

லைட்ஸ் ஆன் - 1
இந்த வீடியோவுல அந்த சிறுவனுக்கு பக்கத்துல இருக்கிற மற்றொரு மீனவருக்கு அப்படி என்ன அவ்வளவு பதட்டம் ? பொலிசு நமக்கு சொல்லிக் கொடுத்துக்கு நேர்மாறா இந்த 13வயசு பொடியன் உண்மையை போட்டு உடைக்கிறானே அப்படின்னு பயமா ? இல்ல உண்மையை சொன்னா லாக் அப்புல வைச்சு லாடம் கட்டிடுவாங்க அப்படின்னு பயமா ?

லைட்ஸ் ஆன் - 2
சிறுவன் சிறீலங்கா நேவி என்று சொல்ல, அவசரம் அவசரமாக விடுதலைப்புலிகள் அப்படின்னு சொல்லு என்று கிசுகிசுப்பது தெள்ள தெளிவாக தெரியுதே மக்கா ....








உண்மையை வெளி உலகுக்கு கொண்டு வந்து மக்கள் தொலைக்காட்சிக்கு நன்றி

Sunday, April 8, 2007

பார்ப்பனீயம் VS பார்ப்பனர் அல்லாதோர் கும்மிகள்

இந்திய சமூகம் சாதிகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் இன்றைக்கும் காணும் நிலைக்கு ஒரு சாரார் பார்ப்பனீயத்தை தொடர்ந்து குற்றம் சுமத்தி தப்பித்துக் கொள்ள முனைகின்றனர். பார்ப்பனீயம் தான் எல்லாப் பிரச்சனைக்கும் காரணம் என்ற எண்ணம் வலைப்பதிவுகளில் ததும்பிக்கொண்டிருக்கும் பரிதாப நிலையையும் காணக்கூடியதாக இருக்கிறது.

சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளில் பார்ப்பனீயம் எந்தளவிற்கு காரணமோ அதே அளவிலான காரணம் பாப்பனியர் அல்லாத சமுதாயங்களாலும் நிகழ்ந்து வந்துள்ளது, இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த எனது கருத்துக்களையும் இந்தப் பதிவின் வாயிலாக வெளிப்படுத்த இருக்கிறேன்

சித்தாந்தங்களின் முரண்

தமிழகம் ஒரு அற்புதமான இடம். இங்கு தான் சமுதாயத்தின் அத்தனை கோட்பாடுகளும் காணக்கிடைக்கின்றன. வலது சாரி சந்தனைவாதிகள், இடது சாரி சந்தனைவாதிகள், தீவிர இடது சாரி போராளிகள், தமிழ் தேசியவாதிகள், இந்திய தேசியவாதிகள், சாதித் தலைவர்கள், மதத்தலைவர்கள், குழுப்பவாதிகள், சினிமாக்காரர்கள் என அத்தனை துறைகளும் நீக்கமற நிறைந்து இருக்கிறன. எல்லா இடங்களிலும் இவ்வாறு தான் உள்ளது, பின் என்ன தமிழகம் அற்புதமான இடம் என்ற பேச்சு வேண்டியிருக்கிறது ?

தமிழகத்தில் அந்த அத்தனை துறைகளிலும் உள்ள முரண்களை பார்க்கலாம். நான் அதனை பார்த்திருக்கிறேன் என்பதால் அந்த முரண்களில் வெளிப்படும் நேர்மை, நேர்மையின்மை, உண்மை, பொய், புரட்டு என அத்தனை சிந்தனை ஓட்டங்களையும் பார்க்கும் பொழுது இந்த தத்துவங்கள், சிந்தனை ஓட்டங்கள் மீது எனக்கு அவநம்பிக்கை ஏற்படுகிறது.

எனது இந்த அவநம்பிக்கைகளை இந்தப் பதிவு மூலமாக வலைப்பதிவில் பகிர்ந்து கொள்ளும் எண்ணம் இருக்கிறது

வாழ்க்கை என்னும் போதி மரம்

"வானம் எனக்கு ஒரு போதி மரம்" என்ற வைரமுத்துவின் கவிதைகள் போல, எனக்கு என்னுடைய வாழ்க்கை ஒரு போதி மரம். சித்தார்த்தனுக்கு போதி மரத்தின் கீழ் ஞானம் கிடைத்தது போல எனக்கு சில நாட்களில், மாதங்களில், வருடங்களில் ஞானம் கிடைக்கவில்லை. இன்று வரையிலும் கிடைக்கவில்லை.

வாழ்க்கை என்ற பாதையில் பயணிக்கும் ஒவ்வொரு நொடியிலும் ஏதோ ஒரு ஞானம் கிடைக்கத்தான் செய்கிறது. சில வருடங்களுக்கு முன்பு தோன்றிய எண்ணங்கள், சில வருடங்களுக்கு முன்பு நாம் தூக்கி நிறுத்திய எண்ணங்கள் இன்றைக்கு அர்த்தமற்றவையாக தெரியும். ஆனாலும் நாம் கடந்த வந்த பாதைகள் நம்முடைய எண்ணங்கள் மாறியதற்கு சாட்சிகளாகவும் இருக்கும்.

தமிழ் வலைப்பதிவுகளை தொடர்ந்து கவனித்து வரும் எனக்கு என் எண்ணங்களை எழுத்தில் சேமித்து வைக்க வேண்டும் என தோன்றியதன் விளைவு தான் இந்தப் பதிவு